ஸ்ரீ சுவாமியே சரணம் ஐயப்பா. எல்லாம்வல்ல இறைவன் எம்பெருமான் வில்லாதி வீரன் வீரமணிகண்டன் அன்னதானப் பிரபு, காசி, ராமேஸ்வரம், பாண்டி மலையாளம் அடக்கி ஆளும் ஓம்ஸ்ரீ ஹரி ஹரசுதன் ஆனந்த சித்தன் ஐயன் ஐயப்ப சுவாமியே சரணம் ஐயப்பா. ஸ்ரீ சுவாமி ஐயப்பனுக்கு பதினெட்டு படியுடன் கூடிய புதிய ஆலயம் நமது முத்துபட்டினம், 3 வது வீதி, பருப்பூரணி,காரைக்குடியில் நிர்மாணிக்க சித்தம் கொண்டு குருஜி ஐயப்பா செல்வராஜால் நிர்மாணம் துவங்கப்பட்டுள்ளது. ஆன்மீக மெய்யன்பர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்களால் இயன்ற பொருளுதவியும் நிதியுதவியும் தாராளமாய் தந்து ஸ்ரீ சுவாமி ஐயப்பன் அருள் பெற வேண்டுகிறோம்.
பதினெட்டு என்ற எண்ணுக்கு வரலாற்று சிறப்புண்டு. பாரதப் போர் நடைபெற்றது 18 நாட்கள், இராமாயணப் போர் நடைபெற்றது 18 மாதங்கள், தேவ, அசுரப்போர் நடைபெற்றது 18 ஆண்டுகள். எனவே பதினெட்டு என்ற எண் மிக முக்கியத்துவமானது. நம்முடைய பிறப்பு இறப்புக்குக் காரணமான பிறவிப் பெருங்கடலைக் கடக்க விடாமல், நம்மை முக்திநெறிக்கு ஆட்படுத்தாமல், நமது பிராரப்த வினைகள் நம்மை வாட்டி வதைக்கின்றன. இவற்றைக் களையவே நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படியும் நம்முடைய வினைகளைக் களையும் வகையில், தீய குணங்களை விட்டு விலக்கி, பிறவிப் பெருங்கடலிருந்து முக்தி அடைய வழிகாட்டுகிறது.
முதல் படி - பிறப்பு நிலையற்றது: நாம் செய்யும் நன்மைகளும், தீமைகளும் நமது புண்ணிய, பாவங்களை நிர்ணயிக்கும் என்ற உண்மையை உணர்ந்து, இறையருளால் முக்தி அடைய வேண்டும் என்ற ஆத்ம உணர்வினை அளிக்கிறது. இதுவே விஷாத யோகமாகும்.
இரண்டாம் படி - சாங்கிய யோகம்: பரம்பொருளை குருவாக உணர்ந்து அவரிடம் ஆத்ம உபதேசம் பெறுவது.
மூன்றாம் படி - கர்ம யோகம்: உபதேசம் மட்டும் போதாது. மனம் பக்குவம் அடைய வேண்டும். அதாவது, பலனைக் கருதாமல் கடமையைச் செய்யும் பக்குவத்தை மூன்றாம்படி உணர்த்துகிறது.
நான்காம் படி -ஞான யோகம்: பாவ, புண்ணியங்களைப் பற்றிக் கவலைப்படாமல், எதன் மீதும் பற்றின்றி பரமனை அடையும் வழியில் முன்னேறும் பாதையைக் காட்டுவது.
ஐந்தாம் படி- சன்னியாச யோகம்: நான், எனது என்ற சிந்தனை இன்றி, எல்லாவற்றையும் துறந்து, இறைச் சிந்தனை ஒன்றையே வாழ்க்கையின் இலட்சியமாகக் கருதி செயல்படும் வழியினைக் காட்டுகிறது.
ஆறாம் படி - தியான யோகம்: கடவுளை அடைய புலனடக்கம் மிக இன்றியமையாதது. ஐம்புலன்களான மெய், வாய், கண், மூக்கு, காது இவற்றை நமது கட்டுப்பாட்டுக்குள் வைத்து அவை இழுத்த இழுப்புக்குச் செல்லாமல் தடுத்து, இறைவனால் அளிக்கப்பட்ட ஐம்புலன்களையும் நல்லவிதமாக இறைச் சிந்தனையால் நிரப்பி நல்வழிப்படுத்தும் வழியினைக் காட்டவே ஆறாம்படி அமைந்துள்ளது.
ஏழாம் படி - ஞானவிஞ்ஞான யோகம்: அனைத்தும் பிரம்மமே என்ற உண்மையை உணர வைக்கிறது.
எட்டம் படி - அட்சர பிரம்ம யோகம்: எப்போதும் இறைச் சிந்தனையில் மூழ்கி, வேறு சிந்தனைகளற்று இருப்பது.
ஒன்பதாம் படி - ராஜவித்யா ராஜகுஹ்ய யோகம்: கடவுள் பக்தி மட்டும் இருந்தால் பயனில்லை; உண்மையான பக்தி, ஆன்மிகத்தை உணர வைத்து, ஏழையின் சிரிப்பில் இறைவனைக காண வைப்பது.
பத்தாம் படி - விபூதி யோகம்: அழகு, அறிவு, ஆற்றல் என எத்தகைய குணங்களைக் கண்டாலும், அதை இறைவனாகவே உணர்வது.
பதினொன்றாம் படி - விஸ்வரூப தரிசன யோகம்: உலகில் ஆண்டவனையும் ஆண்டவனில் உலகத்தையும் பார்க்கும் மனப் பக்குவத்தைப் பெறுவது.
பன்னிரண்டாம் படி - பக்தி யோகம்: இன்ப - துன்ப, விருப்பு - வெறுப்பு, ஏழை - பணக்காரன் என்ற வேறுபாடுகளை நீக்கி, அனைத்திலும் சமத்துவத்தைக் காண வைக்கிறது.
பதிமூன்றாம் படி - க்ஷேத்ர க்ஷேத்ரக்ஞ விபாக யோகம்: எல்லா உயிர்களிலும் இறைவனே வீற்றிருந்து, அவ்வுயிர்களை இயக்குகிறார் என்ற உண்மை நிலையினை உணர வைக்கிறது.
பதினான்காம் படி - குணத்ரய விபாக யோகம்: பிறப்பு, இறப்பு, மூப்பு ஆகியவற்றால் ஏற்படும் துன்பங்களைக் களைந்து இறையளுக்குப் பாத்திரமாவதை காட்டுகிறது.
பதினைந்தாம் படி - புருஷோத்தம யோகம்: தீய குணங்களை விட்டொழித்து, நற்குணங்களை மட்டும் வளர்த்துக் கொண்டு, நமக்குள் தெய்வாம்சத்தை அதிகரித்துக்கொள்ள வழிகாட்டுகிறது.
பதினாறாம் படி - தைவாசுரஸம்பத் விபாக யோகம்: இறைவனது படைப்பில் அனைவரும் சமமானவர்களே என்ற உண்மை நிலையினை உணர்த்தி யாரிடமும் அகங்காரம் இல்லாமல் இருக்க வைக்க உதவுகிறது.
பதினேழாம் படி - ச்ரத்தாத்ரய விபாக யோகம் : சர்வமும் பிரம்ம மயம் என்ற நிதர்சனத்தைப் புரிந்து கொண்டு பரபிரம்ம ஞானம் பெறுவதற்கு வழிகாட்டுகிறது.
பதினெட்டாம் படி - மோட்ச சன்னியாச யோகம்: பதினெட்டு படிகளையும் படிப்படியாய் அடியெடுத்துக் கடந்து வந்தால் நம் கண் எதிரே காட்சி தரும் மணிகண்டப் பிரபு பேரொளியாய் தரிசனம் தந்து, நமது வாழ்வுக்கு வளம் சேர்ப்பார் என்பதே ஐயப்பனின் பதினெட்டு படிகள் நமக்கு உணர்த்தும் தத்துவமாகும்.
ஐம்பொறிகள், ஐம்புலன்கள், ஐந்து கோயில்கள், மூன்று மலங்கள் இவற்றைக் கடந்து மனமொன்றி வழிபட்டாலே ஐயப்பசாமியின் திருவருள் நம்மை வந்து சேரும் என்பதே 18 படிகளின் தாத்பர்யமாகும்.
Muthupattinam 3rd street,
Parupoorani,
Karaikudi,
Sivagangai Dist.
+91 99432 81053